பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல… மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்!

கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத

பண்டைப் பொதுவுடைமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அறிவியல் பூர்வமான பொதுவுடைமை, முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கத் தொடங்கிய அதே வேளையில், மனித குலத்தின் மழலை முதலாளித்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது. உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில் இன்னும் வழிந்து கொண்டிருக்கிறது.

நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி விலைக்கு வாங்க முடியும்? எப்படி விற்க முடியும்? நல்ல வேடிக்கை. காற்றின் தூய்மையும், தண்ணீரின் ஒளியும், எங்களுடைய தனிச்சொத்துகளல்ல் பிறகு அவற்றை எப்படி நீ வாங்க முடியும்?

பூமியின் ஒவ்வொரு துகளும் எங்களின் மக்களுக்குப் புனிதமானது.

பளபளக்கும் ஊசி இலைகளும் மணல் பரந்த கடற்கரைகளும், இருண்ட காடுகளுக்குள்ளே பரவிய பனியும் காடு திருத்திய நிலங்களும், ரீங்கரிக்கும் பூச்சி இனங்களும் எங்கள் மக்களின் நினைவுகள் வழியாகப் புனிதமாக நிலைத்திருக்கின்றன. மரங்களுக்குள்ளே செல்லும் நடுத்தண்டு சிவப்பு இந்தியனின் நினைவுகளை பல தலைமுறைகளாகத் தாங்கி வருகிறது.

நாம் பூமியின் அங்கம்; பூமியும் நம்மில் ஓர் அங்கம்.

எனவேதான் வாஷிங்டனிலிருந்து அதன் தலைவர் எங்கள் “நிலத்தை வாங்கப் போவதாகச்” சொல்லி அனுப்பியபோது எங்களை அவர் அதிகம் விலை கொடுத்து வாங்கிவிட நினைப்பதாகவே தோன்றியது. நிலங்களை வாங்கிய பிறகும் நமக்கென்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுப்பதாகவும் அங்கே நாம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் சொல்லி அனுப்பினார் அவர்.

நமக்கு அவர் தந்தைபோல ஆகிவிடுவார்; நாம் அவருக்குக் குழந்தைகளாகி விடுவோம்; அதனாலேயே நம் நிலங்களை அவர் வாங்க அனுமதித்துக் கொள்வோமாம்.

ஆனால், அது அப்படி எளிதாக முடிகிற விசயமல்ல் காரணம் எங்களுக்கு எங்கள் நிலங்கள் புனிதமானவை.

அருவிகளிலும் ஆறுகளிலும் ஓடுகிற தூய்மையான தண்ணீர் வெறும் நீரல்ல, அவை எங்களது மூதாதையரின் ரத்தம்.

உங்களுக்கு எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால் அது முதலில் புனிதமானதென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அதேபோல உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நிலம் புனிதமானதென்பதை நீங்கள் கற்றுக் கொடுங்கள். படிகம் போன்ற ஏரிகளின் தெளிந்த நீரில் தெரியும் பிம்பங்கள் எங்களது மக்களின் வாழ்வில் நடந்த பலவிதமான சம்பவங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

ஓடுகின்ற நீரில் நீங்கள் கேட்கும் முணுமுணுப்பு எங்கள் பாட்டனின் குரல்.

வெள்ளைக்காரன் இருக்கிறானே அவனுக்கு எங்களின் பழக்கவழக்கங்கள் தெரியாது. எங்கள் நிலத்தின் எல்லாப் பகுதிகளுமே அவனைப் பொறுத்த அளவில் ஒன்றுதான். இரவிலே திருடன் போல உள்ளே நுழைந்து தான் ஆசைப்பட்ட பொருளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போவதுதான் அவன் பழக்கம்.

கல்லறையில் தந்தையைப் புதைப்பான் மறுகணம் மறந்து போவான் அவனுக்குக் கவலையில்லை. பிள்ளைகளிடமிருந்தே கூட நிலத்தைப் பறித்துக் கொள்வான் அவர்களின் எதிர்காலம் பற்றி அவனுக்கு அக்கறையில்லை.

தந்தையின் ஆன்மா இருந்த கல்லறை, சந்ததியின் உரிமை இரண்டையுமே அவன் வெகு சுலபமாக மறந்து போகிறான். தாயாகிய பூமியை, சகோதரனாகிய வானத்தை, ஆடுமாடுகளைப் போல பொன்மணிகளைப் போல விற்கக்கூடிய வாங்கக்கூடிய கொள்ளையடிக்கக் கூடிய பொருள்களாக மட்டுமே அவன் பார்க்கிறான்.

பச்சைப் பூமியை எடுத்து விழுங்கி எல்லாவற்றையுமே வறண்ட பாலைவனமாக்கி விடுகிற அகோரப்பசி அவனுக்கு.

எப்படிப் பார்த்தாலும், எங்கள் பாதைகள் வேறு, உனது பாதைகள் வேறுதான். எங்களுக்கு உங்கள் நகரங்களைப் பார்க்கும் போதே எரிகிறது, வேதனை வாட்டி எடுக்கிறது. காட்டுமிராண்டிகளுக்கு நகரங்களை விளங்கிக் கொள்ள முடியாதென்கிறாய்.

வெள்ளையனின் நகரங்களில் அமைதியான ஒரே ஒரு இடத்தைக் கூட உன்னால் காட்ட முடியாது; வசந்த காலத்தில் இலைகள் விரியும் ஓசைகளை அங்கே கேட்க முடியாது. ஒரு பூச்சியின் சிறகுகள் அசையும் ஓசையைக் கூடக் கேட்க முடியாது.
ஒருவேளை, நான் காட்டுமிராண்டி என்பதால் எனக்குப் புரியாது என்பாய்.

உனது நகரங்களின் இரைச்சல் காதைக் கிழிக்கிறது. இரவில் ஒற்றைப் பறவையின் ஏக்கம் தொனிக்கும் குரலோ, குளத்தின் அருகே தவளைகளின் சுவையான விவாதங்களோ கேளாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? நான் ஒரு செவ்விந்தியன், எனக்கு விளங்கவில்லை.

குளத்தின் மேல் தடவிச் செல்லும் காற்றின் ஒலியை விரும்புகிறான் ஒரு செவ்விந்தியன். பகலில் பெய்யும் மழை சுத்தப்படுத்திய காற்றின் ஊசி இலையில் பரவி வந்த காற்றின் வாசனையே அவன் விரும்பும் வாசனை.

காற்று அவனது பொக்கிஷம். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என்று எல்லா சீவராசிகளுமே ஒரே மூச்சுக் காற்றைத்தான் சுவாசிக்கின்றன.

ஒரு வெள்ளையன் தான் சுவாசிக்கும் காற்றை என்றைக்காவது நின்று கவனித்திருப்பானா?

பல நாட்களாகவே மரணப் படுக்கையில் விழுந்து விட்டவனைப்போல அல்லவோ நாறும் காற்றில் அவன் மூச்சிறுகிக் கிடக்கிறான்.

உங்களுக்கு நிலத்தை விற்கிறோம் என்றால் காற்று எங்களின் பொக்கிஷம் என்று அறிந்து கொள்ளுங்கள். எல்லா உயிருக்கும் காற்றே ஆதாரம், அவற்றில் எல்லாம் காற்றின் ஆன்மா பாய்ந்து ஓடுகிறது. எங்கள் பாட்டனுக்கு எது முதன்முதலில் உயிரானமூச்சைக் கொடுத்ததோ அதே காற்றுதான் அவருக்கு மரணத்தின்போது பெருமூச்சையும் கொடுத்தது.

எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால் தனியே அதை நீ புனிதமாகக் கருதவேண்டும், பாதுகாக்க வேண்டும். அங்கே போகிற வெள்ளையன்கூட பூக்களின் இனிய மணம் நிறைந்த காற்றைச் சுவாசிக்கலாம்.

நானொரு காட்டுமிராண்டி; எனக்கு வேறு விதமாகப் புரிந்து கொள்ளவும் தெரியவில்லை.

புல்வெளியில் ஆயிரம் எருதுகளின் சடலங்கள் அழுகிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன் அவை, அருகே ரயிலிலிருந்து வெள்ளையர்களால் பொழுதுபோக்குக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டவை. புகை விட்டுச் செல்லும் உன் ரயில் எங்கள் எருதுகளை விட எந்த விதத்தில் உயர்ந்தது? எனக்கு விளங்கவில்லை நானொரு காட்டுமிராண்டி.

விலங்குகள் இல்லை என்றால் மனிதன் ஏது? விலங்குகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டால் ஆன்மாவை விட்டு விட்ட கூடுபோல மனிதன் செத்துப் போவான்.

விலங்குகளுக்கு என்னவெல்லாம் நேர்ந்ததோ, மனிதனுக்கு அவை சீக்கிரத்திலேயே நடக்கும். எல்லாமே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை.

உன் குழந்தைகளுக்கு நீ கற்றுத்தா அவர்களின் காலடியில் உள்ள மண் பாட்டன்மாரை எரித்த சாம்பல் என்று. அதனால்தான் அவர்கள் நிலத்தைப் போற்ற வேண்டும் என்கிறேன். எங்கள் சுற்றத்தாரின் வாழ்க்கையால் நிரம்பிய பொக்கிஷமே இந்தப் பூமி என்பதை உன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்.

பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம்; அதை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல மனிதன் தான் பூமிக்குச் சொந்தம் இது எங்களுக்குத் தெரியும்.

பொருள்கள் எல்லாம் உள்ளே இணைந்தவை ஒரு குடும்பத்தை ரத்தச் சம்பந்தம் பிணைப்பது போல. எல்லாப் பொருள்களும் உள்ளுக்குள்ளே இணைந்தவை.

பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.

மனிதன் வாழ்க்கை என்ற வலையைப் பின்னவில்லை; அவன் அதில் ஓர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவன் எத்தனைக்கேடுகள் செய்தாலும், அவற்றையெல்லாம் தனக்கே செய்து கொண்டவனாகிறான்.

கடவுளே வந்து அந்த வெள்ளையனோடு தோளோடு தோள் சேர்ந்து நடக்கலாம்; நண்பர்களைப் போலக் கலந்து பேசலாம்; ஆனால் அவனுக்கும் இறுதித் தீர்ப்பிலிருந்து விதிவிலக்கு இல்லை.

என்ன இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தானே, இதோபார்.

வெள்ளையர்களாகப் பிறந்தவர்களும் உலகை விட்டு நீங்கத்தான் வேண்டும்; மற்ற எல்லாப் பழங்குடியினரைவிடச் சீக்கிரமாகவே மறைந்தும் போகலாம். நீ படுத்துறங்கும் நிலத்தை நீயே அசுத்தப்படுத்தினால் ஓரிரவில் உன் குப்பைகளுக்குள்ளேயே மூச்சு முட்டி நீ செத்துப் போகலாம்.

அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர்போல. எருதுகள் படுகொலையையும் காட்டுக் குதிரைகளைப் பழக்கி விடுவதையும் காடுகளுக்குள்ளே எங்கு பார்த்தாலும் மனித நடமாட்டம் அதிகரிப்பதையும் பழைய பூர்வீகமான மலைகளை மறைத்து தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும் நாம் விளங்கிக் கொள்ளாமலேயே இருக்கிறோம். வரப்போகிற அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர் போல.

புதர்க் காடுகள் எங்கே ?
எல்லாம் போயிற்று
மலைக் கழுகுகள் எங்கே?
அவையும் மறைந்தன.
விரைவாக ஓடும் மட்டக்
குதிரைகளையும் வேட்டையாடி
அழித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்ன நடக்கிறது?
இப்படி வாழவேண்டும் என்ற
அவர்களின் வாழ்க்கை
முடிந்து விட்டது
எப்படியோ மீதமிச்ச வாழ்க்கை
மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம் எங்கள் நிலத்தை நாங்கள் நேசித்ததுபோலவே நீங்களும் நேசியுங்கள்; நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள்; எங்களிடமிருந்து நிலம் பெறுகின்றபோது எப்படி இருந்தது என்பதை மட்டும் நினைவில் வைத்திருங்கள்; எல்லா உறுதியுடனும், எல்லா வலிமையோடும் முழுமையான விருப்பத்தோடும் உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். இந்நிலத்தை நேசியுங்கள்… கடவுள் நம் எல்லோரையும் நேசிப்பதுபோல.

புதிய கலாச்சாரம் 2005
மொழியாக்கம்: புதூர் இராசவேல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s